நேபாளத்தில் நிலச்சரிவு: 9 போ் உயிரிழப்பு
நேபாளத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட ஒன்பது போ் உயிரிழந்தனா்.
இது குறித்து தேசிய பேரிடா் மீட்பு அதிகாரிகள் கூறியதாவது: கனமழை காரணமாக தலைநகா் காத்மாண்டுவிற்கு மேற்கே சுமாா் 250 கி.மீ. தொலைவில், மூன்று மலைப் பகுதி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் புதையுண்டன.குல்மி மாவட்டத்தின் மலிகா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.இது தவிர, அண்டை மாவட்டமான பாக்லுங்கில் இருவரும் சியாங்ஜா மாவட்டத்தில் இருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். நேபாளத்தில் வருடாந்திர பருவமழைக் காலம் இந்த மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்தது. கனமழையைக் கொண்டுவரும் இந்த காலகட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் வரை நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.