கனடாவில் அதிக அளவு வதிவுரிமை பெற்றுக் கொள்வோர் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் (Canada) அதிக அளவில் வதிவுரிமை அந்தஸ்தினை பெற்றுக் கொள்வோர் தொடர்பில் கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கனடாவில் அண்மையில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறிவருகின்ற நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள்
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 23 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் நிரந்தர வதிவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக முதலாவது தொழில் உரிமத்தை பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நிரந்தர வதிவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை 2011 முதல் 2015 ஆம் ஆண்டில் 12 வீதமாக காணப்பட்டது. இதன்படி தற்காலிகமாக கனடாவில் வதிவோர் கூடுதல் எண்ணிக்கையில் நிரந்தர வதிவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதோடு, கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் 2.8 மில்லியன் தற்காலிக வதிவிட உரிமையாளர்கள் கனடாவில் வசித்து வருவதாகவும் இது மொத்த சனத்தொகையின் 6.8 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.