இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஒன்லைன் நிதி மோசடி: 137 இந்தியர்கள் கைது
பாரிய அளவிலான ஒன்லைன் நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்ததாகக் கூறப்படும் 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் நேற்று (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பில் 55 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 29 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டதோடு 55 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொச்சிக்கடையில், 53 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 31 மடிக்கணினிகள் மற்றும் 58 கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மடிவெல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டு எட்டு மடிக்கணினிகள் மற்றும் 38 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், தலங்கம மற்றும் பத்தரமுல்லை பகுதியில் 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, எட்டு மடிக்கணினிகள் மற்றும் 38 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 137 இந்தியர்களிடம் இருந்து மொத்தம் 158 கையடக்கத் தொலைபேசிகள், 16 மடிக்கணினிகள் மற்றும் 60 டெஸ்க்டாப் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், இந்த இடங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்துகொண்டு சட்டவிரோதமான முறையில் ஒன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.