8750 ஆயிரம் பில்லியன் மக்களின் நிதியை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் ரணில்: அளவு கடந்த அன்பு ஏன்?
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள ஜனாதிபதியால் நேரடியாக செலவுகளை செய்யும் வகையில் 8750 பில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து இங்கு கருத்து வெளியிட்ட ஜீ.எல்.பீரிஸ்
”8750 பில்லியன் நிதியை பயன்படுத்தி மக்களுக்கு பயனாகும் அபிவிருத்தித் திட்டங்களை வெறும் மூன்று மாதங்களில் மேற்கொள்ள முடியும் என மூளையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்துக்காகவே இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒன்றிணைந்த நிதியங்கள், அரச நிதியங்கள் மற்றும் கடன் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதிலும், ஆளுங்கட்சி அதன் செல்வாக்கை பயன்படுத்தி இதற்கான நாடாளுமன்ற அனுமதியை கடந்தவாரம் பெற்றிருந்தது.
எப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற போகிறதென இதன்மூலம் எம்மால் அறிந்துக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் பொருட்களை பகிர்ந்தளித்து வருகிறார். இரண்டு வருடம் பதவியில் இருந்தார். ஆனால், இப்போதுதான் மக்கள் மீது அவருக்கு அளவுகடந்த அன்பு ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு இதன்மூலம் பயன் இருந்தால் அதனை எவரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால், அதற்கு மாறான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கின்றனர். இதன்மூலம் மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை.” என்றும் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.