அதானி நிறுவனத்திற்கான அனுமதி இடைநிறுத்தம்?; கோரிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு
வடமாகாணம் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 480 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படை தகவல்களை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும், குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தகவல்களின்றி திட்டம் தொடர்பில் ஆய்வு செய்வது சாத்தியமில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மின்சார சபை கோரிய தகவல்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் மின்சார சட்டமூலத்தின் கீழ் அனுமதி வழங்க முடியாது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.