‘வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்’; நாமல் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

‘வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்’; நாமல் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

13வது அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13வது திருத்தத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டாம் எனவும் அனைத்து தரப்பினர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் வடக்கிற்குச் சென்று 13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று கூறியதை நான் பார்த்தேன்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து அவர்கள் விரும்பும் முதலமைச்சரையும் மாகாண சபைப் பிரதிநிதிகளையும் நியமிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட விடுதலைப் புலிகள் தடை செய்திருந்தனர். 13வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

தேர்தல் நேரத்தில் வடக்கு மக்களிடம் அரசியல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது. வடக்கின் எந்தவொரு அபிவிருத்தி பற்றியும் அவர்கள் பேசவில்லை.

ஆனால் எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் வடக்கு வசந்தம், கிழகின் உதயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன், அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.

அத்துடன், 13வது திருத்தத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் அவர்கள் வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This