பரவுகிறது சதையை உண்ணும் பாக்டீரியா.. இரண்டே நாட்களில் உயிரைப் பறிப்பதால் பீதியில் மக்கள்
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரிய ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா முதல் முதலில் கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும். பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவிக்கிறார்.
அதிகாலையில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.