ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, தியகல பிரதேசத்தில் தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனின் சாரதியும் மேலுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதிவேகமாக பயணித்த வேன் சறுக்கி எதிர்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வேனின் சாரதியும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றுமொருவரும் சிக்கிக் கொண்டதையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் முயற்சியுடன் வேனின் கதவை திறந்து காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்தில் பேருந்தும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மழை பெய்து வருவதால் அவ்வழியாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.