பல்கலை கல்விசாரா ஊழியர்கள் போராட்டப் பின்னணியில் ரணில்?

பல்கலை கல்விசாரா ஊழியர்கள் போராட்டப் பின்னணியில் ரணில்?

இலங்கைத்தீவு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் 41ஆவது நாளாக தொடர்கின்றது.

கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

விடுதிகளிலும் மற்றும் வாடகை அறைகளிலும் தங்கியிருந்து கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்

சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் கற்றல் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் இரண்டு இலட்சம் வரையான மாணவர்கள் இதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தின் பின்னணியில் ரணில்

என்றாலும், கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் அக்கறையுடன் செயல்படவில்லை. அவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் உரிய நகர்வுகளில் ஈடுபடவில்லை.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை கல்விசாரா ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் அதிகாரமிக்க அமைச்சர் ஒருவரை அரசாங்கம் அனுப்பவில்லை. மாறாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனையே அனுப்பியிருந்தது.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என்பதே இதன் உள்நோக்கம் என்றும் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அவர்தான் இருக்கிறார் என்றும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொ.ம.சட்டம் தாக்கும் செலுத்தும்

தேர்தலொன்று நெருங்கிவரும் சூழலில் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாகி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள புதிய பொருளாதார மறுசிரமைப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டமூலங்களை அரசாங்கம் அதன் தேவைக்கு நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

அரசாங்கம் அதன் தேவைக்காக நிறைவேற்றி வரும் சில சட்டங்கள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாகப் பட்டாதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விடயங்களில் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டம் தாக்கம் செலுத்துமென பொருளாதார வல்லுநுர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வலுவிழக்கச் செய்வதே நோக்கம்

அரசாங்கத்தின் இச் செயற்பாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் எழுச்சியடைந்துவிடக்கூடாதென்பதற்காகவே கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வை வழங்காது பல்கலைக்கழகங்களை ரணில் முடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதே ரணிலின் நோக்கமாக உள்ளது.

தற்போதைய சூழலில் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தால் மாணவர்கள் எழுச்சியை ரணிலால் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அதனை தடுக்கும் பல்வேறு உத்திகளை அவர் கையாண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

CATEGORIES
Share This