மகிந்தவின் வீராப்புக்கு மொட்டு கட்சியே வேட்டு

மகிந்தவின் வீராப்புக்கு மொட்டு கட்சியே வேட்டு

தனியார் மயப்படுத்தலுக்கு கடும் எதிர்ப்பு என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கையில், இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு பொதுஜன பெரமுனவினர் ஆதரவளிப்பது வேடிக்கையானது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது கபீர் ஹாசீம் மேலும் கூறுகையில்,

இந்த சட்டமூலம் தொடர்பில் மின்சார சபை துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது தொடர்பில் ஆராய தங்களுக்கு போதுமான காலம் வழங்கப்படவில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கங்களும், பொறியியலாளர்களும் கூறுகின்றனர். தங்களுடன் முறையாக கலந்துரையாடவில்லை என்றும் கூறுகின்றனர். இதனை பாராளுமன்ற மேற்பார்வை குழுவுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னரே கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றமும் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையையில் அவசரமாக இந்த சட்டமூலத்தை கொண்டு வருவது முறையற்றதே.

இதேவேளை 2020 ஆகஸ்ட் மாதத்தில் 66 வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2023 ஒக்டோபர் மாதத்தில் 88 வீதத்தால் அதிகரித்தனர். அதனை தொடர்ந்து 18 வீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனால் குறைந்த வருமானம் பெறும் 5 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுதான் நடந்தது. இப்போது மின் கட்டணத்தை குறைக்கப் போவதாக அமைச்சர் கூறுகின்றார். ஆனால் 5 இலட்சம் மக்களின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு இப்போது கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கூறுகின்றனர்.

2002ஆம் ஆண்டு காலத்தில் இதுபோன்ற சட்டமூலத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முன்வைத்தது. அப்போது இதனை விடவும் ஒழுங்குபடுத்தல்கள் முறைமைகள் இருந்தன. இந்நிலையில் இன்று இந்த சட்டமூலத்தை கொண்டுவந்த குழுக்களே அன்று இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அந்த குழுவே இதுபோன்ற சட்டமூலத்தை கொண்டுவருவது ஆச்சரியமாக இருக்கின்றது. எவ்வாறாயினும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படாது.

மகிந்த ராஜபக்ஷ, தனியார் மயப்படுத்தலுக்கு கடும் எதிர்ப்பு என்றும் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். அப்படியிருக்கையில் பொதுஜன பெரமுனவினர் எப்படி இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக கையுர்த்துவர். அணிந்திருக்கும் ஆடையைதான் தூக்க வேண்டி வரும். நாங்கள் முன்வைக்கும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் நாங்கள் ஆதரவளிப்போம். இல்லாவிட்டால் நிறைவேற்றுவதை ஏற்க மாட்டோம் என்றார்.

CATEGORIES
Share This