வெள்ள அபாயம் – கொலன்னாவையில் வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேற்றம்: கர்ப்பிணித் தாய்மார்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்

வெள்ள அபாயம் – கொலன்னாவையில் வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேற்றம்: கர்ப்பிணித் தாய்மார்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்

களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் கொழும்பு கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொலன்னாவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று முதல் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

நாட்டின் பிரதான ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உடுகம வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள் செல்ல முடியாத நிலையில், ஹெலிகொப்டர்கள் மூலம் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நெலுவ லங்காகம பிரதேசத்தில் இன்று (02) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள வீடு ஒன்று இடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், காலி – தவலம பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்கள் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டறியும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This