தேர்தல்களைப் பிற்போடுவதற்கான சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்க்கிறோம்
ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் சகல விதமான முயற்சிகளையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன் தவிர்ந்த தமிழ்த்தேசிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்களிப்பதற்கான பொதுமக்களின் உரிமைக்கு மதிப்பளித்து, தேர்தல்களை உரிய காலப்பகுதியில் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் எனவும், அதனை முன்னிறுத்தி பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் உரிய காலப்பகுதியில் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், பாலித்த ரங்கே பண்டாரவின் இக்கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.
அதன்படி தேர்தல்களைப் பிற்போடுவதற்கான யோசனை குறித்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஜனநாயக நடைமுறையைத் தடைசெய்வதற்கும், மக்களின் வாக்களிக்கும் உரிமையை மறுதலிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
‘ஜனநாயக நாடொன்றில் வாக்களிப்பதற்கு மக்கள் கொண்டிருக்கும் உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். நாட்டின் பொருளாதார நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு தேர்தல்களை நடத்துவதும், மக்கள் ஆணையின் பிரகாரம் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரைத் தெரிவுசெய்வதும் இன்றியமையாததாகும். மாறாக தேர்தல்களைப் பிற்போட்டு, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே நாட்டில் சர்வாதிகாரப்போக்கு, நேர்மையின்மை, ஊழல் மோசடிகள் என்பன மேலோங்கியிருக்கின்றன. இத்தகையதோர் பின்னணியில் தேர்தல்களைப் பிற்போடுவது நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கே வழிவகுக்கும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். குறிப்பாக கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவும் காலப்பகுதியில் தேர்தல்களைப் பிற்போடுவது ஏற்புடையது எனவும், இருப்பினும் தற்போது அவ்வாறான நெருக்கடிகள் எவையும் இல்லாத நிலையில் உரிய காலப்பகுதியில் தேர்தல்களை நடத்தவேண்டியது மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்தோடு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும், மக்கள் அவர்களது பிரதிநிதிகளை வாக்களித்துத் தெரிவுசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், ஆகவே தேர்தல்களைப் பிற்போடுவதற்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
அதனையொத்த கருத்தையே ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் வெளிப்படுத்தினார். ‘தேர்தல்களைப் பிற்போடுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டும். ஏற்கனவே உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள், மாகாணசபைத்தேர்தல்கள் என்பன காலந்தாழ்த்தப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தி, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும்’ என வலியுறுத்தினார்.
அதேபோன்று பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டை மக்கள் ஆணை அற்றவர்களால் மீட்டெடுக்கமுடியாது எனச் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், எனவே தாமதமின்றி உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்றார். 2019 ஆம் ஆண்டு பொதுமக்களால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஆணை, 2022 இல் அவர்களாலேயே மீளப்பெறப்பட்டதாகவும், ஆகவே தேர்தல்கள் ஊடாக அந்த ஆணையை மீண்டும் ஒருவர் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்ட அவர், ஆகையினால் தேர்தல்களைப் பிற்போடுவதைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகக் கூறினார்.
இருப்பினும் இவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்திய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், தேர்தல்களைப் பிற்போடுவது பயனளிக்குமே தவிர, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறைவு எனத் தெரிவித்தார். தேர்தல்களுக்காக பெருந்தொகைப் பணத்தை செலவிடவேண்டியிருக்கும் பின்னணியில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு தேர்தல்களைப் பிற்போடுவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்தல்களை நடத்தவேண்டிய கடப்பாடு இருப்பினும், வெறுமனே வாய்வார்த்தையில் ‘ஜனநாயகம்’ எனக் கூறிக்கொண்டிருப்பதை விட, தற்போது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.