யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள்: காலத்தால் மறக்கமுடியாத தமிழர் பண்பாட்டு அழிவு
தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகம், சிங்கள பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட நிகழ்வு.
உலகில் எங்கும் காணக்கிடைக்காத, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், நூல்கள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டிருந்ததது யாழ்ப்பாண நூலகம்.
1981 ஜூன் 04ஆம் திகதி இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர்.
மர்ம நபர்கள் யார்?
1981 மே 31ஆம் திகதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டுடிருந்த வேளை, மர்ம நபர்களால் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதில் வெடித்த வன்முறையால், யாழ்ப்பாணத்தின் பல வணிக நிறுவனங்கள், கடைகள், ஈழநாடு தினசரி அலுவலகம் போன்றவை கொளுத்தப்பட்டன.
இதன்போதுதான் பல வரலாற்றுப் பொக்கிஷங்களின் இருப்பிடமான யாழ்ப்பாண நுலகத்தையும் சிங்களப் பேரினவாத கும்பல் எரித்துச் சாம்பலாக்கியது.
இந்த பண்பாட்டு அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 40 அகவைகள் பூர்த்தியாகின்றன.
நுலகத்தின் தோற்றம்
1930களில் கே.எம்.செல்லப்பா என்பவர் தான் சேகரித்து வைத்திருந்த நூல்கள், பத்திரிகைகளைக் கொண்டு 1933ஆம் ஆண்டில் தனது வீட்டிலேயே வாடகை நூலகம் ஒன்றை தொடங்கினார்.
சிலரின் ஆலோசனையின் கீழ் 1934 ஒகஸ்ட் 1ஆம் திகதியன்ற யாழ்ப்பாண பொது மருத்துவமனை வீதியில் வாடனை அறையொன்றை ஏற்பாடு செய்து 844 நூல்கள், 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொது நூலகம் தொடங்கப்பட்டது.
இட நெருக்கடியின் காரணமாக 1936ஆம் ஆண்டில் நகர மண்டபத்துக்கு நூலகம் மாற்றப்பட்டது.
இந்நிலையில் பலரின் விருப்பத்துக்கமைய, யாழ்ப்பாண நூலகம் சர்வதேச தரத்தை எட்டுவதற்கு இந்திய நூலகரான எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆலோசனை வழங்கினார்.
துரையப்பா திறந்து வைத்தார்
அதன்படி, கட்டடக்கலைஞர் வி.எம்.நரசிம்மன் கட்டிடத்தை வடிவமைத்துக் கொடுக்க, 1953ஆம் ஆண்டு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
1959ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் மேயராக இருந்த ஆல்ப்ரட் துரையப்பா அவர்களால் நூலகம் திறந்து வைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது.
குழந்தைகளுக்கான பகுதி 1967 இல் தொடங்கப்பட, உரைகள், கருத்தரங்கங்கள், பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான நிகழ்வரங்கம் 1971இல் திறக்கப்பட்டது.
ஓலைச்சுவடிகள், பழைமைவாய்ந்த நூல்கள், பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என சுமார் 97000 அரிய புத்தகங்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்கியது.
இவ்வாறு தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திகழ்ந்த நூலக எரிப்பானது, தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியது.
2003ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட நூலகக் கட்டிடத்தை புதுப்பித்து திறக்க முயன்றது இலங்கை அரசாங்கம். அதற்கு கடும் எதிர்ப்புகள் எழவே அதையும் மீறி தற்போது யாழ்ப்பாண நூலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
97 ஆயிரம் நூல்கள்
இருப்பினும் 97ஆயிரம் நூல்கள் எரிக்கப்பட்டமையானது, வெறும் நூலக எரிப்பு மட்டுமல்ல, தமிழர்களின் ஆறாத வடுக்களில் ஒன்றாக தற்போது வரையில் காணப்படுகின்றது. இது தமிழ் வாசிப்புப் பண்பாட்டுக்குப் பேரழிவு. காலத்தால் அழிக்க முடியாத இந்த சோகம் நிகழ்ந்து 40 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இன்றும் அவ்வாறான பண்பாட்டு அழிவுகள் கலாச்சாரச் சீர்கேடுகள் என்று ஈழத்தமிழர்கள் மீது இனரீதியான கட்டவிழ்ப்புகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்த்தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த விடயங்களை ஆதாரத்துடன் சமா்ப்பித்து உரையாற்றி வருகின்றனர். வெளியுலகத்துக்கும் இது தெரியாத சங்கதியல்ல.