பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜீவன்; தோட்ட மக்கள் முன்னெடுத்த போராட்டம் வெற்றி
நுவரெலியா மாவட்டம் உடரத்தல தோட்டத்தில் தேயிலை செய்கையை முற்றாக அழித்து, அங்கு கோப்பி செய்கையை பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அப்பகுதி மக்களால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனடிப்படையில், களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக நுவரெலியா- உடரதல்ல பகுதியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிரடியாக களத்தில் இறங்கினார்.
இதனால், குறித்த மக்களின் போராட்டம் தற்போது வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டில் இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
தொடர்ந்து நிறுவனத்தின் இத் தீர்மானத்திற்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.
தோட்டத் தலைவர்கள் மூவர் பணி நீக்கம்
தேயிலை செடிகளை அகற்றி, கோப்பி செய்கையை முன்னெடுப்பதற்காக, தோட்ட நிர்வாகத்தினால் கொண்டு வரப்பட்ட இயந்திரத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் தோட்டத் தலைவர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட போதிலும், நிறுவனம் அதற்கு இணங்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்த பின்னணியில், உடரத்தல தோட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை, களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இதன்படி, களனிவெளி நிர்வாகத்திற்குரிய தோட்ட தொழிற்சாலைகளிலிருந்து தேயிலை தூளை, விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத வகையிலான தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த பகுதிக்கு சென்று நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.
இந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த நிறுவனம் இணக்கம் தெரிவித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
மேலும், கோப்பி செய்கை தொடர்பாக தீர்மானத்தை தற்காலிகமாக களனிவெளி நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பவுள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்து பிரச்சினைகள் எழும் பட்சத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இது தொடர்பில் முழு கவனத்தையும் செலுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.