தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்

தோல்வியை மறைத்துக்கொள்ளவே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

இது வெட்கப்பட வேண்டிய யோசனையாகும். தேர்தலை பிற்போடும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு பிற்போட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்திருக்கும் யோசனை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தேர்தலை பிற்போடவேண்டும் என்ற கூற்றின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தே்ர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரும் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்றால் அவர்கள் இவ்வாறான யோசனை ஒன்றைக்கூட முன்வைக்க தேவையில்லை.

மக்கள் ஆணையுடன் வெற்றிபெற முடியாது என்பதை அவர்கள் தெரிந்ததாலே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு பிற்போட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். பொதுச் செயலாளரின் இந்த கூற்று மிகவும் வெட்கப்பட வேண்டியதொன்றாகும்.

நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை தற்போது சஜித் பிரேமதாசவை நோக்கி சென்று கொண்டிருக்கி்றது. அடித்தள மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு அதிகரித்து வருகிறது.

அந்த மக்கள் பலத்தை தற்போது காணக்கூடியதாலே ஐக்கிய தேசிய கட்சின் பொதுச் செயலாளர் இவ்வாறு யோசனை ஒன்றை முன்வைத்திருக்கிறார். தேர்தல் தோல்வியை கண் முன்னே கண்டுகொண்டு, அந்த தோல்வியை மறைத்துக்கொள்வதற்கு வேறு திட்டங்கள் எதுவும் இல்லாமலே தற்போது ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத்தையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடும் யோசனையை முன்வைத்திருக்கிறார்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களை நடத்தாமல், மக்களின் ஜனநாயக உரிமையான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தங்களின் உறுப்பினர்களை தெரிவு செய்துகொள்ளும் உரிமையை இல்லாமல் செய்திருக்கிறது.

அதன் வரிசையிலேயே தற்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடத்தாமல் ஒத்திவைக்க முடியுமா என பார்ப்பதற்கான முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். ஜனநாயக தலைவர் ஒருவர் எப்போதும் மக்களின் கருத்துக்களை கேட்கவேண்டும். மக்களின் விருப்பத்துக்கு இடமளிக்க வேண்டும்

தேர்தலை பிற்போடுவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெறவேண்டும். சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும் அதேநேரம் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரவேண்டும்.

இவற்றுக்கு நீண்டா காலம் செல்லும். இவற்றிற்கு அப்பால், இந்த நடவடிக்கைகளுக்கு பாரிய செலவு ஏற்படும். அதனால் அரசியலமைப்புக்கு விராேதமான மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரான தேர்தலை பிற்போடும் இந்த யோசனைக்கு நாங்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்றார்.

CATEGORIES
Share This