சாரதி மரணம்; நாவலப்பிட்டியில் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி

சாரதி மரணம்; நாவலப்பிட்டியில் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி

நாவலப்பிட்டி – கடியன்லேன தலவாக்கலை வீதியில் வழமையாக காலை 6.30 மணிக்கு சேவையில் இருந்த நாவலப்பிட்டி நகரில் இருந்து புறப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் கடந்த வாரமாக சேவையில் இல்லாமையால் ஆசிரியர்கள், மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் உட்பட பொது பயணிகளும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குகிறார்கள்.

இந்த பஸ் சேவையை நம்பியே நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ் வழியே பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாக இப் பிரதேச பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

அது போலவே அரச, தனியார் காரியாலய நடவடிக்கைகளும் பெரிதும் தேக்க நிலையும், தொழில்த்துறை பாதிப்படைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே மாலை வேலையிலும் இந்த பஸ் சேவை இல்லாமையால் காரியாலய உத்தியோகத்தர்கள் மேலும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டி பஸ் டிப்போவினால் நிர்வகிக்கப்படும் இப் பஸ் சேவை குறித்து டிப்போ தரப்பினருக்கு எடுத்துரைத்த போதிலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பயணிகள் கடும் விசனம் தெரிவிக்கிறார்கள்.

கடந்த வாரம் குறித்த நேரத்திற்கு சேவையில் ஈடுபட்ட பஸ்ஸின் சாரதி சேவையில் இருந்த போது திடீர் மரணத்தை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

அவ் விடயத்திற்கு துயரம் தெரிவிக்கும் பயணிகள் மிக அவசியமாக உணரப்படும் இப் பஸ் சேவையை மாற்று ஏற்பாடுகளுடன் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையும் பெரும் சவாலாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

CATEGORIES
Share This