சஜித்துடன் இருக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களை இழுக்க ரணில் திட்டம்; உட் கட்சிப் பூசலை பயன்படுத்த முயற்சி

சஜித்துடன் இருக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களை இழுக்க ரணில் திட்டம்; உட் கட்சிப் பூசலை பயன்படுத்த முயற்சி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கட்சியிலுள்ள தமிழ், முஸ்லிம் தலைவர்களை இலக்குவைத்து தனது வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கூட்டணியை கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டுவதை விடவும் தன்னிச்சையாக செயற்படுவதால் தற்போது அக்கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ள சிறுபான்மை கட்சிகள் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைக்கால பேச்சுவார்த்தைகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் நிலவும் முரண்பாடுகள் என்பன ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இடம்பெறுவதாக பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலுக்கான கோரிக்கைகளை நிராகரித்து ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் வாக்குகளே காரணமென தங்களுடைய நெருக்கமானவர்களுக்கு ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சித் தலைவர்களை தங்களுடன் இணைத்து சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளமை அம்பலமானது.

இதேவேளை சஜித் பிரேமதாச தன்னிச்சையாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமையால் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுயாதீனமாக செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

எனினும் இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறி, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க போன்றவர்களை அடிப்படையாகக் கொண்டு உலகப் போருக்கு எதிரான அமைப்பு ஒன்றை நிறுவி ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் றிசாத் பதியுதீன் முதல் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் வேறு எந்த முஸ்லிம் தலைவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. அந்த சந்திப்பு தோல்வியடைந்ததால், பேச்சுவார்த்தை இரண்டாம் கட்டத்துக்கு செல்லவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கும் முஸ்லிம் தலைவர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ஆரம்பித்த இரண்டாவது நடவடிக்கை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான எம்.எச்.எம்.அஸ்ரப் பெயரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார். இதன் மூலம் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெற்றுத் தருவதும், அப்போது அஸ்ரப்பின் நெருங்கிய நண்பராக இருந்த ரவூப் ஹக்கீமின் ஆதரவைப் பெறுவதும் ஜனாதிபதியின் திட்டமாக இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்பு அலைகள் வெளியாகிய நிலையில், முஸ்லிம் தலைவர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும் இரண்டாவது திட்டமும் தோல்வியடைந்தது.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மனோ கணேசன், ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என அறிவித்திருந்தனர்.

இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தொடர்ந்தும் தாமதத்தை வெளிப்படுத்தி வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This