ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?; ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள்

ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?; ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள்

இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியிருந்தாலும் அதனை தவிர்த்து சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீட்டிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் எழுத்தாளர் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

விசேடமாக ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி மூலம் முன்னிலைப்படுத்த வேண்டிய நிலையில் இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவருக்கும் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடியான கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் ஜனாதிபதியாக தக்க வைத்துக்கொள்வது அவர்களுக்கு எல்லா விதத்திலும் அனுகூலமாக அமையும் என்பது அரசியல் வட்டாரங்களின் நிலைப்பாடாக காணப்பட்டு வருகிறது.

1977ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 5/6 அதிகாரத்தை பெற்ற ஜே.ஆர். ஜயவர்தன 1982ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீடித்ததுடன் மொத்தமாக அவருடைய பதவிக்காலம் பத்து வருடங்களால் நீட்டிக்கப்பட்டது.

விசேடமாக ஜனாதிபதியுடைய பதவிக் காலத்தை நீட்டிக்க சர்வஜன வாக்கெடுப்பை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் 2/3 அதிகாரம் அவசியம்.

தற்போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு கீழ் நாடாளுமன்றத்தில் அதிகளவான விசேட சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தினால் சர்வஜன வாக்கெடுப்பினால் ரணிலுக்கு அதிக அரசியல் இலாபங்கள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாப்பின் பிரகாரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நிச்சயமாக புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறான ஒரு சூழலில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து காணப்படும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் நீதித் துறையினர் மத்தியிலும் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This