சஜித்-அனுர விவாதம்; இழுபறி நிலை

சஜித்-அனுர விவாதம்; இழுபறி நிலை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவருக்கிடையிலான விவாதத்தை ஜூன் 6 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த திகதியில் விவாதத்தை நடத்துவதில் இரு கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியால் முதலில் பொருளாதார குழுக்கிடையிலான விவாதத்தையும் பின்னர் இரு கட்சித் தலைவர்களுக்குமிடையிலான விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் இதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முதலில் இரு கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதத்தையும் பின்னர் பொருளாதார குழுக்களுக்கிடையிலான விவாதத்தையும் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி கோரிக்கை முன்வைத்துள்ளது. இவ்வாறு இரு கட்சிகளுக்கிடையிலும் இழுபறி நிலை உருவாகியுள்ள நிலையில், மீண்டும் விவாதம் நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் விவாதம் இடம்பெறுமா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் முதலில் பொருளாதார குழுக்கிடையிலான விவாதத்தையும் பின்னர் இரு கட்சித் தலைவர்களுக்குமிடையிலான விவாதத்தையும் நடத்துவதற்கும் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

முன்னதாக இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதம் மே 27 முதல் 31ஆம் திகதி வரையிலும், கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதம் ஜூன் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.

பின்னர் சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு வழங்கப்பட்ட திகதிகளில் இருந்து, அனுரகுமார திஸாநாயக்க, ஜூன் 6ஆம் திகதியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில், அதன் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

தற்போது எந்த விவாதத்தை முதலில் நடத்துவதென்பது தொடர்பில் இரு குழுக்களுக்கிடையிலும் தீர்மானம் எட்டப்படாமையால் மீண்டும் விவாதம் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

CATEGORIES
Share This