மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் 3வது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் 3வது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்

இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது.இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது.

CATEGORIES
Share This