தனியார்மயமாக்கலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தும் மஹிந்த
அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட அறிக்கையில் தேசிய சொத்துக்கள் மற்றும் அரச நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை சுட்டிக்காட்டிய அவர் அரச சொத்துக்கள் தொடர்பான தீர்மானங்களை, வாக்காளர்களிடமிருந்து கிடைக்கும் ஆணைக்கேற்ப தீர்மானிக்க எதிர்கால நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கடிதத்தில்,
“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரச சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றேன்.
புதிய அரசாங்கம், அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் ஆணைக்கு ஏற்ப கையாள முடியும்.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பணியாற்றிய நான் அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆட்சியின் போது விற்பனை செய்யவில்லை. நாடு பொருளாதார வளர்ச்சியை கண்டது” என குறிப்பிட்டுள்ளார்.