யுத்தத்தை நடத்திய அரசாங்கங்களே பொறுப்புக்கூறலை தாமதிக்கின்றன : தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

யுத்தத்தை நடத்திய அரசாங்கங்களே பொறுப்புக்கூறலை தாமதிக்கின்றன : தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்திவருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவரும் நிலையில், இனியேனும் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 மே 18ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இருப்பினும் யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரமன்றி யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் அடையாளங்காணப்பட்டு முழுமையாகக் களையப்படவோ, தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வோ இன்னமும் வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக தொடர்ச்சியாக வாக்குறுதியளித்துவரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அதனை முன்னிறுத்தி தேசிய தேர்தல் ஆண்டான இவ்வருடத்தில் எத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன என வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

அதன்படி, இது பற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிஞானம் சிறிதரன், ‘2009இல் ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் பலவீனமானதாகவே பார்க்கின்றன. 2009ஆம் ஆண்டின் பின்னர் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே 2010இல் சரத் பொன்சேகாவுக்கும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவுக்கும், 2019இல் சஜித் பிரேமதாஸவுக்கும், 2022இல் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால ஜனாதிபதித் தெரிவு) ஆதரவளித்தோம். இருப்பினும் சிங்கள அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றியிருக்கின்றன. ஆனால் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது’ என்று சுட்டிக்காட்டினார்.

இத்தகையதொரு சூழ்நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச அரங்கில் தமிழர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அரசியல் தீர்வுக்கான சாத்தியம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இவ்விடயத்தில் தமது கட்சியின் நிலைப்பாட்டை பின்வருமாறு தெளிவுபடுத்தினார்:

இன அழிப்பின் ஊடாக யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஒருபோதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாது என நாம் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். மாறாக சர்வதேச பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் அதேவேளை, தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதேபோன்று யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்தி வருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கமைய ஒற்றையாட்சியைப் புறக்கணித்து, சமஷ்டியை வலியுறுத்தும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். எனவே இதனைக் கருத்திற்கொண்டு சிங்கள தேசிய கட்சிகள் அவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை முன்வைக்கவேண்டும்’ என வலியுறுத்தினார்.

மேலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பல விடயங்களில் இன்னமும் மாற்றம் ஏற்படாதபோதிலும், சில விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக படையினர் வசமிருந்த காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளமை, அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இல்லாத அளவுக்கு தற்போது தொல்பொருள் திணைக்களமும், பௌத்த பிக்குகளும் இணைந்து வட, கிழக்கில் காணிகளை அபகரித்துவருவதாக விசனம் வெளியிட்டார்.

அத்தோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறல் என்பது மேலும் இறுக்கமானதாக மாறிவருவதாக தெரிவித்த அவர், இவை அனைத்தும் தற்போது மிகக் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவித்திருக்கின்றன என்றார்.

‘தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியிலும் ஒற்றுமையீனம் மேலோங்கி வருகின்றது. இதன் விளைவாக தமிழ் மக்களுக்கு இடையிலும் பிளவுகள் அதிகரித்துவருகின்றன. பிளவுபட்டிருக்கும் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவருகின்றது. ஆகவே இவ்வேளையில் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும். அதேபோன்று இக்குழப்பகரமான சூழ்நிலையில் பொதுவேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் கட்சிகளும், சிவில் சமூகமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்’ எனவும் சித்தார்த்தன் வலியுறுத்தினார்.

CATEGORIES
Share This