செய்தி சேகரிக்க சென்ற மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், வாகரை பிரதேச செயலாளர் அருணன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் தஜீவரன் உட்பட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடமும் கேள்வியெழுப்பப்பட்டது.
எனினும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவ்வாறு ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டிருந்தால் இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தமாட்டோம் என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
வாகரையில் இல்மனைட் தொழிற்சாலை மற்றும் இரால் வளர்ப்பு பண்ணைக்கு எதிராக வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.