கருத்துக் கணிப்புகள் மக்களுக்கானதா?: அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கே சாதகமாக உள்ளது
“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் நாமே முன்னிலையில் உள்ளோம்” என சில நாட்களாகவே அரசியல் கட்சிகள் கூறும் கருத்துகளை அரசியல் மேடைகளில் அடிக்கடி கேட்க முடிகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல கருத்துக் கணிப்புகள் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதனை கண்டறிய, பொது மக்களை நேரடியாக சந்தித்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனியார் தொலைக்காட்சிகள், சுயாதீன ஊடகங்கள், அமைப்புகள் போன்றவற்றால் இவ்வாறான கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான கருத்துக் கணிப்புகள் உண்மைத் தன்மை வாய்ந்தனவா என்பதில் எந்த அளவிற்கு சந்தேகங்கள் காணப்படுகின்றதோ அதே அளவிற்கு இந்தக் கருத்துக் கணிப்புகளை ஆதாரமாகக் கொண்டு தேர்தலில் வெற்றிப் பெறுபவரை கணிப்பதும் கடினம்.
தேர்தலை இலக்கு வைத்து வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கும் அரசியல்வாதிகளின் உரைக்கு இந்த கருத்துக் கணிப்புகளின் பக்க பலமாக உள்ளதே தவிர மக்களுக்கு இதில் எந்தப் பயனும் இல்லை.
மே தினப் பேரணியில் மக்கள் கூட்டம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியல் பல அரசியல் பிரச்சார நிகழ்வுகளும் பேரணிகளும் நடைபெற்றன.
நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் ஒவ்வொரு கட்சியை பிரநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றி, தமக்கு தாமே புகழாரம் சூடிக்கொள்கின்றமையை கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு பேரணிகளில் கலந்துக் கொண்ட மக்கள் தொகை எவ்வளவு என்பதே தற்போது அரசியல் கட்சிகளிடையே பேசுப் பொருளாக மாற்றியுள்ளன.
இம்முறை அதிக மக்கள் தொகை தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிகளில் கலந்துக் கொண்டிருந்ததாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடி
இலங்கைத் தீவானது கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இதன் ஆரம்பத்துக்கு வித்திட்டது.
அதனைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு, சுற்றுலாத் துறை வீழ்ச்சி, அந்நிய செலாவணியில் மாற்றம், நாணய மதிப்பு குறைந்தமை , பொருட்களின் விலையேற்றம் , ஆட்சி மாற்றம், மக்கள் உரிமைகளுக்காக ‘அரகலய‘ போராட்டம் என நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டு தலைகீழாக மாறியது.
‘இலங்கையை நோக்கி எப்போது எண்ணைக் கப்பல் வருகை தரும்‘ என்ற கேள்வியின் பிரகாரம் தான் நாட்டின் பிரதான பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக அப்போது வெளியிடப்பட்டன.
அந்த அளவிற்கு நாடு வறுமைப் பாதையில் பயணித்தது.
இத்தகைய வறுமையிலிருந்து தற்போது மீண்டெழுந்து வந்த நாடு எனும் அடிப்படையில் இலங்கைவாழ் மக்கள் அளப்பரிய அனுபவங்களைக் கொண்டுள்ளனர்.
மக்களின் தற்போதைய நிலைப்பாடு
இவ்வாறான ஒரு நிலைமையைக் கடந்து வந்த இலங்கை மக்கள் தமது வாக்குகளை இனியும் பிரயோசனமற்ற விதத்தில் உபயோகிக்க மாட்டார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்க ஒரு தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை.
ஆட்சியாளர்களாக யார் வந்தாலும் தனக்காக தான் மட்டுமே போராட முடியும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
ஆக, பொது மக்களின் முன் சரியான மற்றும் சீரான அரசியல் கொள்கைகளை முன் வைப்பதன் மூலம் நாடு முன்னேற்றமடையும், என்பது கண்கூடு.
எவ்வாறாயினும், 500 அல்லது ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்படும் கருத்து கணிப்புகளால் எவ்வித பயனும் இல்லை.
மக்களின் வாக்குகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் அரசியல் தலைவர்கள் கருத்துக்கணிப்புகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காது, அரசியல் கொள்கைகளை மக்கள் முன் வெளிப்படுத்துவது சிறந்தது என்பது மக்களின் மனநிலையை நன்கு அறிந்த அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.