சார்பு அரசியல் – விவாதத்தால் பயன்பெறபோவது யார்?; வரலாறு கூறும் உண்மைகள்

சார்பு அரசியல் – விவாதத்தால் பயன்பெறபோவது யார்?; வரலாறு கூறும் உண்மைகள்

அனுர – சஜித் இடையிலான விவாதம் இப்போதைக்கு புலி வருது… புலி வருது… கதையாகத்தான் பார்க்கப்படுகிறது.

இருவருக்கும் இடையிலான விவாதம் ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும், தற்போது இந்த விவாதம் தேவைதானா எனும் அளவிற்கு சலிப்புத்தட்ட வைத்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இதேபோன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையிலான விவாதம் மற்றும் இழுபறி இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல.

இதற்கு முன்னதாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடக்காமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.

ரணில் – மஹிந்த இடையே விவாதம்

அந்தவகையில், 2005 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் அரசியல் விவாதம் ஒழுங்கு செய்யப்பட்டது.

இலங்கையில் இத்தகைய விவாதங்களுக்கு ஆரம்ப புள்ளியாக இதுவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொரகொட, ரணில் சார்பில் விவாதத்தை ஒருங்கிணைப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அதே சமயம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மஹிந்த சார்பில் விவாதத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இருவருக்கும் இடையில் கடிதப் பரிமாற்றம் இடம்பெற்றது. மிலிந்த மொரகொடவினால் விவாதத்திற்கான திகதிகள், ஊடகம் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு மஹிந்தவின் விருப்பத்தை முன்மொழியுமாறு கோரியிருந்தார்.

இருப்பினும், கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தபோதிலும் இரு தரப்பினரின் ஒப்புதலுடன் இறுதியில் விவாதம் நிறுத்தப்பட்டது.

கோட்டாவுக்கு அழைப்பு விடுத்த சஜித்

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், அதற்கு கோட்டாபய ராஜபக்‌ஷ பதிலளிக்ககூட அக்கறை காட்டவில்லை. இவ்வாறே கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலின் போதான விவாதங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த வரிசையிலே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையிலான விவாதம் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை பொருளாதாரக் கொள்கைகள் மீதான விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்தது.

தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி சவாலை ஏற்று ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர் சவால் விடுத்தது.

இந்த நிலையிலே, பல்வேறு ஊடகங்கள் சஜித் – அனுர விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கு இணக்கம் தெரிவித்தன.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அனுர, சஜித் மற்றும் ரணில் ஆகியோருக்கு இடையில் ஒரு விவாதத்தை பரிந்துரைத்தார்.

விவாதத்திற்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்கான திகதியை தெரிவு செய்யுமாறு கோரி தொடர்ந்தும் கடிதம் அனுப்பிவருகிறது.

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி இந்த விடயத்தில் மௌனத்தை கடைபிடிப்பதனை அவதானிக்க முடிகிறது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்குமான விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சஜித் – அனுர விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் இணைக்கும் முயற்சி இடம்பெற்று வருகிறது.

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரணில் மற்றும் சஜித் இடையில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி தமது ஆதரவை ரணிலுக்கு வழங்க முற்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து சஜித்துக்கு எதிராகவும் ரணிலுக்கு ஆதரவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

இலங்கையின் தற்போதைய அரசியல் களம் பல தரப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது. இந்த இயக்கவியலில் ஒரு கூட்டுறவை உருவாக்குகின்றனர்.

இங்கு எவரும் தனித்து மற்றவர்களிடமிருந்து சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில், இலங்கையின் அரசியல் சமன்பாடு இந்த நுணுக்கமான பரஸ்பர சார்பு சமநிலையில் தங்கியுள்ளது என்பதில் இருவேறு கருத்தில்லை.

CATEGORIES
Share This