இந்தியாவில் கைதாகி விடுதலையான 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதில் எவரும் அக்கறை கொள்ளவில்லை
இந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும் காட்டவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (6) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் நிலை தொடர்பாக இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற 05 மீனவர்கள் தமிழக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்டபோது கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அவர்களின் படகு அங்கு ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட காலம் முதல் அவர்கள் விடுவிக்கப்பட்ட காலம் வரை சுமார் 6 மாதங்கள் அவர்கள் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் எவரும் எடுக்கவில்லை.
தமிழக மீனவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களும், தமிழக அரசு மற்றும் அங்குள்ள இந்திய துணை தூதரகங்கள் முனைப்புடன் செயற்படுகின்றன. ஆனால், எமது மீனவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இந்த 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியாவில் உள்ள எம்மோர் என அழைக்கப்படும் புத்த கோவில் பகுதியில் இலங்கை துணைத் தூதரகத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இவர்களில் மூவர் திருமணம் செய்தவர்கள்; இருவர் திருமணம் செய்யாதவர்கள். அவர்களின் குடும்பங்கள் இங்கு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலையை எவரும் கேட்டறிந்ததாக தெரியவில்லை. வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மீனவரின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது.
யாருமே அவர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை. எனவே தற்போது அங்குள்ள மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடற்றொழில் அமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கையை எடுத்து, 5 பேரையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.