இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்து: கட்டணம் 4,956 ரூபாவாக நிா்ணயம்
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு மே 13ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்கான கப்பல் போக்குவரத்துக்கு பயணக் கட்டணம் 4,956ரூபாவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி பயணிகள் கப்பல் இந்திய பிரதமர் நரேந்தி மோடியால் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு ஒரு சில நாள்களில் வடகிழக்குப் பருவமழை காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்போது, பயண கட்டணமாக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 7,670 ரூபாவாக நிா்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாகை – காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் மே 13ஆம் திகதி தொடங்கப்படவுள்ளது.
இந்த பயணிகள் கப்பல் சேவையை இன்ட் ஸ்ரீ தனியாா் கப்பல் நிறுவனம் கப்பல் சேவையை வழங்குகிறது.
இதுதொடர்பாக இன்ட் ஸ்ரீ தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் நந்தகோபாலன் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு மே 13ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை சென்றடையும்.
காங்கேசன் துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு நாகை துறைமுகத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும்.
பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே துறைமுகத்துக்கு வரவேண்டும். பரிசோதனைகளுக்கு பின்னரே பயணிகள் கப்பலுக்குள் அனுமதிக்கப்படுவா்.
பயணி ஒருவா் 60 கிலோ எடை கொண்ட பொருளை எடுத்து செல்லலாம். இதைத் தவிர கையில் 5 கிலோ பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். 60 கிலோ எடையை 20 கிலோ வீதம் 3 பண்டல்களாக பிரித்து எடுத்து வரவேண்டும்.
கப்பலில் 150 இருக்கைகள் உள்ளன. இதில் 27 உயா் வகுப்பு இருக்கைள் ஆகும். சாதாரண இருக்கைக் கட்டணம் வரியுடன் ரூ. 4,956 ஆகவும், உயா் வகுப்பு இருக்கை கட்டணம் ரு. 7,500 ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் பயணம் செய்ய விரும்புவோா் செயில் இன்ட்ஸ்ரீ என்ற இணையதள முகவரியில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம்.
அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை என்ற பெயா் கொண்ட இந்தக் கப்பல் மே 10 ஆம் திகதி நாகை துறைமுகத்திற்கு வந்தடையும். சோதனை ஓட்டங்கள் முடிந்த பின்னா் மே13ஆம் திகதியில் இருந்து போக்குவரத்து தொடங்கும். அரசின் விதிமுறைகளுக்கு அமைய கடவுச்சீட்டு அவசியம். இந்திய நாட்டை சோ்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை“ எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையிலிருந்து செல்லும் ஒரு பயணிக்கு இரு வழிப் பயணத்துக்கு அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.