EPAPER
டுபாயின் மீண்டும் கனமழை: விடுக்கப்பட்டது அவசரகால எச்சரிக்கை

டுபாயின் மீண்டும் கனமழை: விடுக்கப்பட்டது அவசரகால எச்சரிக்கை

மத்திய கிழக்கில் செல்வச் செழிப்புடன் வாழும் முதன்மையான நாடு ஐக்கிய அரபு ராஜ்ஜியம்.

ஆனால், கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் பிராந்தியத்தில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்நாடு பல்வேறு நெக்கடிகள சந்தித்துள்ளது.

பாலைவன நகரமான டுபாயில் கடந்த 16ஆம் திகதி இரண்டு ஆண்டுகளில் பெய்யும் மழையின் அளவுக்கு 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய நெடுஞ்சாலைகள் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் டுபாய் பிராந்தியத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

விமான நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் ஒருவாரத்துக்கு மேல் விமான சேவைகளும் முடங்கின. ஒரு வாரத்துக்கு பின்னர் விமான நிலையம் வழமை போன்று இயங்கும் என ஐக்கிய அரபு ராஜ்ஜியம் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் அந்நாட்டு காலநிலையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலை மேற்கொள்காட்டி கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தொலைதூர பணிகள் தொடர்பில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சீரற்ற வானிலையால் விமான சேவைகள் பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, அண்மையில் பெய்த மழையை விட இம்முறை குறைவான மழை வீழ்ச்சியே பதிவாகும் என குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This