மலையகத்தில் ஏட்டிக்கு போட்டியாக ரணில் – சஜித்தின் மே தினக் கூட்டங்கள்
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களினால் பாரிய மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் மலையகத்தில் இடம்பெறும் மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.
அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கொட்டகலை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இக்கூட்டத்துக்கு நாடளாவிய ரீதியிலிருந்து பேரூந்துகள் மூலம் மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இதன் போது தற்போது பேசுபொருளாகியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
இதே வேளை தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலையில் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாளர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான தனது எதிர்கால திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கவுள்ளார்.
இவை தவிர பிரதான அரசியல் கட்சிகளின் பிரதான மே தினக் கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளன. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டம் இன்று மாலை கொழும்பு – மாளிகாவத்தையில் பீ.டி.சிறிசேன மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் உத்தேச தேர்தல்கள் தொடர்பிலும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு – கோட்டை, செத்தம் வீதியில் இடம்பெறவுள்ளது. குணசிங்கபுறவிலிருந்து பேராணியாக செத்தம் வீதியை வந்தடைந்து, அங்கு கூட்டம் இடம்பெறவுள்ளது. நண்பகல் 12 மணியளவில் பேரணி ஆரம்பமாகி, 2 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதே வேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி ‘நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் பிரதான கூட்டத்தையும் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏனைய கூட்டங்களையும் நடத்தவுள்ளது. அதற்கமைய கொழும்பு பீ.ஆர்.சி. மைதானத்தில் பகல் 2 மணிக்கு பேரணி ஆரம்பமாகி, சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கர மாவத்தையில் 3.30க்கு கூட்டமும் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காலை 10 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கிலும், மாத்தறையில் ரா{ஹல சந்தியில் ஊர்வலம் 2 மணிக்கு ஆரம்பமாகி கூட்டம் மாலை 3.30 மணிக்கு மாத்தறை கடற்கரை பூங்காவிலும் இடம்பெறவுள்ளன. அநுராதபுரத்தில் ஊர்வலம் 2 மணிக்கு வலிசிங்க ஹரிஷ்சந்ர விளையாட்டரங்கில் ஆரம்பமாகி, கூட்டம் மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவை தவிர ஏனைய கட்சிகள், தொழிற்சங்கங்களின் மே தினக் கூட்டங்களும் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.