பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எதிர்கட்சிக்கு 43 கோடி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் பாடலி சம்பிக ரணவக்க மற்றும் ஜே.சீ அலவத்துவல ஆகிய இருவருக்கும் பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 11 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பாடலி சம்பிக ரணவக்கவுக்கு 101 அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 49,800,000 ரூபாயும் ஜே.சீ அலவத்துவலவுக்கு 61,380,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கு ரணில் விக்கிரமசிங்க, பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் சுமார் 32 கோடியை வழங்கிய நிலையில் இதுவரையில் அக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுமார் 43 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நேரடி முன்மொழிவுகள் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் அவற்றை செயற்படுத்த நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேரடி முன்மொழிவுகளுக்கு நிதி அமைச்சின் மூலம் நிதியைப் பெற்றுக்கொள்வது பொதுமக்களுக்கு சேவை செய்யவே ஒழிய அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பதற்கு அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அபிவிருத்தி திட்டங்கள், மகளிர் மன்றங்கள், மரண நன்கொடை சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் சங்கம், விளையாட்டு சங்கம், விகாரைகள், கோவில்கள், தேவாலயங்கள் போன்ற மதத் தலங்களை மேம்படுத்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நேரடி ஆலோசனைகளுக்கான நிதி தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளரிடம் வினவ தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பலவாறான நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்கி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்த கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுள் 60 வீதமானவர்கள் இதுவரையில் நிதி அமைச்சில் நேரடி ஆலோசனைகளுக்காக நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளை பிரநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஆலோசனைகளை நிதி அமைச்சில் ஸ்திரப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான நேரடி ஆலோசனைகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் கட்சியின் பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமா என்ற கேள்விக்கு வரலாற்றில் ஒருபோதும் கட்சியின் பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற்று பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பெற வேண்டியதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி காலத்தில் எந்தவொரு அமைச்சர்களும் இதனை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.