உக்ரைன் – ரஷ்ய போரில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை: மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
ரஷ்யா – உக்ரைன் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் இலங்கைப் போராளிகள், குறிப்பாக முன்னாள் இராணுவத்தினர் சுரண்டப்பட்டு ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்படுவது குறித்து அண்மைக்காலமாக பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் போரில் மரணிக்க நேரிட்டதாகவும், அண்மையில் அவ்வாறு மரணித்தவர்களின் உடல்களை அடையாளப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலவரங்களின்படி, 60 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உக்ரைனில் வெவ்வேறு தளங்களில் பணிபுரிவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யாவில் பணிபுரிவதாகவும் தெரியவருகிறது.