நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் விதி மீறும் பொலிஸார்
வி.தீபன்ராஜ்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்துள்ள போதிலும் அவற்றை மீறுவதில் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றமையானது அவ்விதிகளை சரியாக அமுல்படுத்துவற்கு தொடர்ந்து தடையாக அமைகின்றது.
கடந்த வருடம் 2023 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி குறித்த பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததோடு, 53 பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக கனரக வாகனங்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்ட குறுக்கு வீதியில் காலை ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பொலிஸ் மா அதிபர் தலைமையில் நுவரெலியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் , அப்பகுதியில் உள்ள சமூக செயற்பாட்டாளர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து தொடர்பிலான படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் குறித்து பேருந்துக்கு பின் பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஜீப் வண்டியும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் cp NC – 9361 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட பேருந்தும் , wp KP – 5823 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஜீப் வண்டியுமே இவ்வாறு குறித்த தடை செய்யப்பட்ட வீதியில் சென்றுள்ளது.
தொடர்ந்து எதிர்காலத்தில் குறித்த வீதியில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளையும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.