இலங்கை கைது செய்த கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கைது செய்த கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினர், கடந்த மார்ச் 10ஆம் திகதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளனர். அத்துடன், 22 கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளனர். இது நமது நாட்டு கடற்தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம். எனவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

நமது கடற்தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக நம் நாட்டுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது. சமீபகாலமாகஅவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது.

இத்தகைய கைது நடவடிக்கைகள், பாதிக்கப்படும் கடற்தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

எனவே, உணர்வுப்பூர்வமான இந்த பிரச்சினையின் தன்மையை கருத்தில்கொண்டு, கடற்தொழிலாளர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This