ஹிட்லரின் ஆட்சி போல மோடியின் ஆட்சியும் 2024இல் முடிவடையும் – அகிலேஷ் யாதவ்
வரும் மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் இட ஒதுக்கீட்டையும் தன் மானத்தையும் காப்பாற்ற நடத்தப்படும் தேர்தல் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அகிலேஷ் பேசினார். அதில், ஒருபுறம், அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் உள்ளனர், மறுபுறம், அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் மக்கள் உள்ளனர்.
2014 – இல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024 – இல் வெளியேறுவார்கள். ஹிட்லர் கூட 10 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார், அது போல மோடியின் ஆட்சியும் 10 ஆண்டுகளுடன் நிறைவுறும்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சட்டரீதியான உத்தரவாதம் இருக்க வேண்டும். விவசாயிகளும், விவசாயமும் அழிந்தால், பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.