தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ள உட்கட்சி முரண்பாடுகள்!

தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ள உட்கட்சி முரண்பாடுகள்!

தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளதோடு, எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகின்றமை மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில் விடுக்கும் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த தவக்கால மடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது, திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில் மீண்டும் ஒரு தவக் காலத்தில் கத்தோலிக்க மக்களாகிய நாம் காலடி பதித்துள்ளோம். இத் தவக்காலம் அருளின் காலமாகவும் , மனமாற்றத்தின் காலமாகவும் அமைந்துள்ளது.

பழைய பாவ இயல்புகளை களைந்து விட்டு செபம் , தவம் ,தான தர்மம் வழியாக இறைவனோடும் தன்னோடும் அயலவர்களோடும் ஒப்புரவாக வேண்டிய காலமாக இந்த தவக்காலம் அமைந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்து இழுபறி நிலை தொடர்கின்றது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகிறது.

இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்கு பல்வேறு காய் நகர்த்தல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே இந்த நிலையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப் படவும் தொடர்ந்து நாம் செபிப்போம். மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

பெரும்போக நெல் அறுவடை நடைபெறும் இக்காலத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத சூழ்நிலையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையின் தாக்கத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. மன்னார் தீவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள 250 மெகா வாட் காற்றாலை சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முனைப்போடு செயல்படுகின்றது.

இத்திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்து எம்மாலும் பொது அமைப்புகளாலும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை விடுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து நாம் நமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This