செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார்!

செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார்!

செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சாந்தன் இயற்கை எய்தினார். அவருக்காகவே உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிற அவரது தாயாரை பார்க்காமலே சென்றுவிட்டார்.

​செய்யாத குற்றத்திற்கு 32 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் அடைத்து சித்திரவதைக்கு ஆளான திரு சாந்தன் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்”

CATEGORIES
TAGS
Share This