தீர்வுக்காக நீதிமன்றை நாடிய தமிழரசு கட்சி!
இலங்கை அரசாங்கத்தின் நீதியை நாங்கள் நம்பவில்லை, சர்வதேசத்தை நோக்கியே நாங்கள் எங்கள் தீர்வை கேட்கின்றோம். ஆனால் நாங்கள் இன்று என்ன செய்கின்றோம். தீர்வுக்காக இலங்கை நீதிமன்றில் கையேந்தும் நிலையை இலங்கை தமிழரசு கட்சிக்குள் உருவாக்கி இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே விடுதலையாக வேண்டுமென்றால் தமிழ் தேசியத்திலே உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக தான் பலர் தமிழ் தேசியத்தை சேர்ப்பதற்காக பல வடிவங்களை எடுத்திருக்கிறார்கள்.
உலக நாட்டில் இருக்க கூடியவர்கள், புலம்பெயர்ந்த நாட்டினுடைய அமைப்புகளிலே எங்களுக்கு எதிரான சக்திகள் ஊடுறுவியுள்ளது. பல திட்டங்களை கொண்டுவருகிறார்கள்.
இங்கே நாங்கள் ஒரு தீர்வுக்காக முன்னோக்கிச் செல்கின்ற போது எங்களுக்கு பல தடைகள் இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இவைகளை தாண்ட வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம் என கூறியுள்ளார்.