ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில்!

ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில்!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பானது கூகுள் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் ட்விட்டர் தளமாக இருந்து தற்போது எக்ஸ் என மாற்றம் பெற்றுள்ள தளமானது விரைவில் எக்ஸ் மெயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் அறிவித்துள்ளார்.

தவிரவும் இது ஜீ மெயில் சேவைக்கு மாற்றாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார், எக்ஸ் தளத்தில் மின்னஞ்சல் சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக திட்டமிடுகிறீர்களா என்று அவரிடம் வினவப்பட்ட போதே, அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

எக்ஸ் மெயில் (XMail) இல் உள்வாங்கப்படவுள்ள அம்சங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான விவரங்கள் இதுவரையில் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் அதுதொடர்பான ஆர்வம் பயனர்கள் மத்தியிலே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், X அதன் மைக்ரோ-ப்ளோக்கிங் தளத்தில் கட்டண சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது, இதனால் எக்ஸ் மெயில் (XMail) இதே மாதிரியைப் பின்பற்றி, அதன் மின்னஞ்சல் சலுகைக்குள் கட்டணச் சேவைகளை அறிமுகப்படுத்துமோ என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதற்கிடையே கூகுளின் ஜீ மெயில் சேவைகள் மூடப்படவுள்ளது என அண்மையில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன, இதன்போது ஏராளமான ஊகங்களும், மாற்று சேவைகளின் தேவை தொடர்பான விவாதங்களும் எழுந்திருந்தது.

இருப்பினும், இந்த வதந்திகளை கூகுள் உடனடியாக நிறுத்தும் முகமாக, ஜீ மெயிலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு மூலம் ஜீ மெயில் தொடர்ந்து செயற்படும் என்பதை உறுதிசெய்து, அதன் நிறுத்தம் குறித்த கவலைகளை நீக்கியது.

இந்நிலையில் எக்ஸ் மெயில் (XMail) சேவை களத்தில் நுழைந்தால், அது ஜீ மெயில் உடனான போட்டியை தீவிரமடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமாத்திரமன்றி, எக்ஸ் மெயில் (XMail) இன் அறிமுகமானது தற்போது பயனர்கள் மத்தியிலே பிரபலமடைந்து வருவதாகவும் மின்னஞ்சல் சேவை சந்தையில் எதிர்பார்ப்புக்களை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This