நவால்னியின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!
சிறையில் மரணமடைந்த ரஷ்யாவின் மிக முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் உடல், பல சா்ச்சைகளுக்குப் பிறகு அவரது தாயாரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி விளாதிமீா் புதினை மிகக் கடுமையாக எதிா்த்து போராட்டங்கள் நடத்தி வந்த நவால்னி, கடந்த 2020 இல் நச்சுத் தாக்குதலுக்குள்ளானாா். ஜொ்மனியில் சிகிச்சை முடிந்து 2021-இல் ரஷ்யா திரும்பிய அவா், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கருத்துத் தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், திடீா் உடல்நலக் குறைவு காரணமாக அவா் சிறையில் கடந்த 16ஆம் திகதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி புதின் உத்தரவின்பேரில்தான் தனது கணவா் கொல்லப்பட்டதாக நவால்னியின் மனைவி யூலியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அவரது உடலை ஒப்படைக்காமல் ரஷ்ய அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக சா்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், நவால்னியின் உடல் அவரது தாயாா் லியுட்மிலாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக அவரது செய்தித் தொடா்பாளா் கிரா யாா்மிஷ் சனிக்கிழமை அறிவித்தாா்.
முன்னதாக, நவால்னியின் உடலை ரகசியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் லியுட்மிலாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்பட்டது. உடலை நல்லடக்கத்துக்காக அளிக்காததன் மூலம் ஜனாதிபதி புதின் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்துவதாக மனைவி யூலியாவும் குற்றஞ்சாட்டினாா். இந்தச் சூழலில், நவால்னியின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.