கொவிட்-19 தடுப்பூசி வீரியம் விரைவாக குறைகிறது!

கொவிட்-19 தடுப்பூசி வீரியம் விரைவாக குறைகிறது!

65 வயதுக்கும் அதிகமான மூத்தோரின் உடலில் செலுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் வீரியம் விரைவில் குறைகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, புதிய கொவிட்-19 கூடுதல் தடுப்பூசியை அடிக்கடி போட்டுக்கொள்வது பற்றி அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

65 வயதுக்கும் அதிகமானோரின் நோய் எதிர்ப்பு சக்தி மரபணுக்கள் குறைவாக இருப்பதால் அவர்கள் போட்டுக்கொண்ட முதல் இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளின் வீரியம் விரைவில் குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கு என்யுஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த முனைவர் பட்ட மாணவர் டாக்டர் வான்டா ஹோ தலைமை தாங்கினார்.

ஆய்வில் 29 பேர் பங்கெடுத்தனர். அவர்களில் 14 பேர் 66 வயதுக்கும் 82 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். மற்றவர்கள் 25 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் ஃபைசரின் எம்ஆர்என்ஏ கொவிட்-19 தடுப்பூசியை இருமுறை போட்டுக்கொண்டவர்கள்.

தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொவிட்-19 கூடுதல் தடுப்பூசியை அடிக்கடி போட்டுக்கொள்வது மூத்தோருக்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் ஹோ கூறினார்.

முதல்முறை கொவிட்-19 தொற்று காரணமாக மூத்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை அடிக்கடி பார்ப்பதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஹோ தெரிவித்தார்.

“முதல்முறை கொவிட்-19 பாதிப்புக்குப் பிறகு அவர்களுக்கு மேலும் பல தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். முதல்முறை கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதுமே உடல் அளவிலும் அறிவாற்றல் அடிப்படையிலும் அவர்களது நிலை மோசடைந்ததை நான் பார்த்தேன். இதுதொடர்பாக ஆய்வு நடத்தும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது,” என்று டாக்டர் ஹோ கூறினார்.

CATEGORIES
TAGS
Share This