“உங்கள் கடிதங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தன”: மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரண்மனை அதிகாரபூர்வமாக கடந்த பெப்ரவரி 6 அன்று தெரிவித்தது. ஆனால், எந்த வகையான புற்றுநோய் என்பது பற்றியோ உடலின் எந்த பாகத்தில் உள்ளது என்பது குறித்தோ அரண்மனை அலுவலகம் தகவல் வெளியிடவில்லை.
மேலும், மன்னர் சார்லஸ் இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற தொடங்கி விட்டதாகவும் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக உலகெங்கும் உள்ள பல முக்கிய தலைவர்கள் செய்தி அனுப்பி வந்தனர்.
மேலும், பல இங்கிலாந்து மக்களும் மன்னர் சார்லஸ் நலம் பெற அவருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.
இதுவரை உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கைப்பட எழுதி மற்றும் வரைந்து அனுப்பியுள்ள கடிதங்கள் தினந்தோறும் அரண்மனையில் குவிகின்றன.
இது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:
இது போன்ற அன்பான எண்ணங்கள்தான் எனக்கு பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன. பல கடிதங்களை படிக்கும் போது எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது.
நான் நலமடைய விரும்பும் அனைவருக்கும் என் நன்றி.
எனக்காக நேரம் ஒதுக்கி தங்களின் அன்பான வார்த்தைகளால் கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு சார்லஸ் தெரிவித்தார்.