“அவர் விட்டு சென்ற பணியை தொடர்வேன்” – நவால்னியின் மனைவி

“அவர் விட்டு சென்ற பணியை தொடர்வேன்” – நவால்னியின் மனைவி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் விமர்சகரும், ரஷ்ய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வருடம் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார். சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா இது குறித்து தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

3 தினங்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார்.

கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.

அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.

அலெக்சிக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், மேலும் வேகத்துடனும் போராடுவதுதான்.

போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும்.

எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன். அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம்.

இவ்வாறு யூலியா கூறினார்.

யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷ்ய அரசு மறுத்து விட்டது.

CATEGORIES
TAGS
Share This