டிரம்ப் மோசடி: ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த உத்தரவு!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இவர் மீது பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
மேலும் தொழில் ஜனாதிபதியான டிரம்ப் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றில் வழக்கு நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.
இந்த நிலையில் நிதி மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஆர்தர் எங்கோரோன் அளித்த தீர்ப்பில் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டியதற்காக டிரம்ப் அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும் என்றும் நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.
இவ்வழக்கில் டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளார். அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று டிரம்ப் வக்கீல்கள் தெரிவித்தனர்.
குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான கட்சி வேட்பாளர் தேர்தலில் அவர் முன்னிலையில் உள்ளார். அவருக்கு கட்சியில் அமோக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.