ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா இதுவரை 85இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஜோர்தானில் உள்ள தனது தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதிலடியாகவே அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் இராணுவத்தின் நிலைகள் மீதும் அதனுடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நீண்டதூர பி 1 தாக்குதல் விமானங்கள் உட்பட பல விமானங்கள் இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நாம் தெரிவு செய்யும் நேரங்களில் நாம் தெரிவு செய்யும் இடங்களில் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மத்திய கிழக்கில் அல்லது உலகில் வேறு எந்தவொரு இடத்திலும் மோதல்களை நோக்கி பயணிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு தீங்கிழைக்க முற்படுபவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This