அடிமை சாசனத்திலிருந்து விடுபடும் வரை தமிழர்களின் உரிமைக்குரலை எவராலும் நசுக்க முடியாது!
ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.
எனவே தமிழர்கள் இந்த சிங்கள தேசத்தின் அடிமை சாசனத்தில் இருந்து விடுபடும் வரை தமிழ் மக்களின் உரிமைக்குரலை எவரும் நசுக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் கடந்த 2022ஆம் ஆண்டு நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நேற்று முன்தினம் (31) விசாரணைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் ஆஜராகி சுரேஸ் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு, கிழக்கு முழுவதும் எங்கள் மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாட்டுக்கு நீதிமன்றங்களை பொலிஸார் பிழையாக வழிநடத்திக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் எதற்கு தடை விதிக்கவேண்டும் என தெரியாமல் உத்தரவிடப்படுகிறது.
சட்டத்துக்கு முரணான விடயங்களுக்கு வடக்கு, கிழக்கில் அனுமதி கொடுக்கப்பட்டு, எங்களுடைய இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கும் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் வருடாவருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதற்காக மாறி வருகின்ற அரசுக்கள் அவற்றின் ஆட்சியை தக்கவைப்பதற்காக அவற்றுக்கு ஏற்ற வகையில் சட்டங்களை பிறப்பித்து, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை குரல்களை நசிக்கி வருகின்றன.
அதன் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக 5 சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் நிகழ் நிரல் சட்டம் பிரதானமானது. அது தமிழ் மக்களின் குரலை நசிக்கும் சட்டமாக இருக்கின்றது.
இந்த ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக்கொண்டு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைபடுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை எங்கள் மக்களும் சர்வதேசமும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப் படுகொலையை உடன் நிறுத்தவேண்டும் என தென் ஆபிரிக்க சர்வதேச நீதிமன்றில் கோர, அந்த அறிக்கையை ரணில் ஆதரிக்கிறார் என்றால் இவரின் இரட்டை வேடம் சர்வதேச மட்டத்தில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மக்களும் புத்திஜீவிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, இந்த சட்டங்கள் எல்லாம் பிறப்பிக்கப்படுவது, இந்த ஆட்சியையும் அரசையும் தக்கவைப்பதற்காகவே.
1948இல் இந்த நாட்டில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர், சிங்கள ஆட்சியாளர்களிடம் இந்த அதிகாரம் போன பின்னர், சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை தொடர்ந்து அடிமைகளாக அடிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
எனவே, தமிழர்கள் இந்த தீவில் இருந்து அடிமை சாசனத்தில் இருந்து விடுபடும் வரை தமிழ் மக்களின் உரிமைக்குரலை எவரும் நசுக்க முடியாது என்பதுடன் எந்த விதமான தடைகள் வந்தாலும் தொடர்ந்து பயணிப்போம் என்றார்.