மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவதளம் மீது ஆளில்லா விமான தாக்குதல்!
சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர்.
ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க படையினர் கொல்லப்படுவது இதுவே முதல்தடவையாகும்.
ஈரான் ஆதரவு குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நாங்க்ள பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களை நாங்கள் தகுந்த தருணத்தில் உரிய விதத்தில் பொறுப்புக்கூறச்செய்வோம் என பைடன் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நாங்கள் மத்தியகிழக்கில் மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டோம் மூன்று துணிச்சல் மிக்க ஆன்மாக்களை இழந்துள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடாத அதிகாரிகள் குடும்பத்தவர்களிற்கு தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மூளை காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் 34 படையினரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் காயமடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படையினர் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்குவைத்தே ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல்வடகிழக்கு ஜோர்தானிலேயே இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியும் மத்தியகட்டளை பீடம் தெரிவித்துள்ள அதேவேளைசிரியாவிற்குள்ளேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எங்கள் பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெறவில்லை என ஜோர்தான் தெரிவித்துள்ளது.
டவர் 22 என்ற தளத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.