சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகள்!

சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகள்!

சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

மார்ச் மாத தொடக்கத்தில் இங்கு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் இங்கு வலியுறுத்தினார்.

அதற்கு முன்னதாக, சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர், இந்தத் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படும் இந்த 1,996 வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும், 108 வீடுகள் இந்நாட்டின் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

இதன்படி, பேலியகொடை துடுகெமுனு வீதியில் 615 வீடுகள், தெமட்டகொட எழுமடுவ தோட்டத்தில் 586 வீடுகள், மொரட்டுவ பெட்டரி தோட்டத்தில் 575 வீடுகள், மஹரகம அம்பவத்தையில் 112 வீடுகள் மற்றும் கொட்டாவ பழத்துருவத்தயில் 108 வீடுகளும் கட்டப்படவுள்ளன. 108 கொட்டாவ பழத்துருவத்த வீடுகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குகிறது. இது இலங்கை நாணயத்தில் சுமார் 24.48 பில்லியன் ரூபாயாகும்.

இந்த வீடமைப்புத் திட்டம் 08 இடங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதில் இரண்டு இடங்களுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஏனைய இடங்களில் இருந்த வெவ்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்த இடங்கள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை. அதே நேரம் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கின்றதால் அந்த இடங்களையும் அமைச்சரவைக்கு முன்வைத்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படுவதற்காக சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஒப்பந்த நிறுவனங்கள் கிடைப்பதற்கு இருக்கின்றது. அந்த 5 நிறுவனங்களையும் பெற்றுக் கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This