யாழில் நாசகார வேலை ; பெல்ஜியத்திலிருந்து பணம் அனுப்பிய பெண்!

யாழில் நாசகார வேலை ; பெல்ஜியத்திலிருந்து பணம் அனுப்பிய பெண்!

யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள இரண்டு ஆடை விற்பனை கடைகள் தீயில் எரித்து, கடைக்குள் இருந்த சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருந்தன.

கடைகள் எரித்து சில நாட்களில் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. அத்துடன் நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் வழிப்பறி செய்யப்பட்டது.

குறித்த குற்றச்செயல்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த 3 சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வாள் என்பவற்றை பொலிஸார் மீட்டு இருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, பிரதான சந்தேக நபரின் பெரியம்மா முறையான பெண்ணொருவர் பெல்ஜியம் நாட்டில் வசித்து வருவதாகவும், அவர் ஊடாக பழக்கமான நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டுக்கும் தீ வைப்பதற்கு 12 இலட்ச ரூபாய் பணம் வழங்கியதாகவும், வாகனங்களுக்கு தீ வைக்க 07 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்களின் வங்கி கணக்குகளை சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்து உள்ளத்துடன், வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய நபரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கையையும் பொலிஸார் எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This