வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறிய 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த வடக்கு கடற்படையினர், அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.