டெல்லியில் இன்று நடக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்றுநடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
தமிழர்களின் பண்பாட்டு விழாவாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள், தங்களது வீடுகளில் இந்நாளில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வர். இந்த ஆண்டுபொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும்பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் விழாவை இன்று கொண்டாடுகிறார்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பாஜக தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று காலை 10 மணிக்கு எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்கிறார்.
விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளிக்கிறார்.
தமிழகத்தில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஆண்டும் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நடத்திய பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது, 2-வது முறையாக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.